Uncategorized

சுதந்திர இந்தியாவின் ஐந்தாண்டு திட்ட பொருளாதார வளர்ச்சி

ஐந்தாண்டு திட்டங்கள்

ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக வளர்ச்சிக்குத் திட்டமிடுவதில் இந்தியா சோவியத் யூனியனின் முன்னுதாரணத்தைப் பின்பற்றியது.
பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைப்பதற்காக 1950இல் திட்டக் குழு (Planning
Commission) நிறுவப்பெற்றது. ஒவ்வொரு திட்டமும்
பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால வளர்ச்சிக்கு கிடைக்கப்பெறும் மூலவளங்களையும் மதிப்பீடு செய்தது. அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டன. வேளாண்மை,
தொழிலகம், ஆற்றல், சமூகத்துறைகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் முழுமையான பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.
தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குவது திட்டமிடுதலின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக
இருந்தது

1951-56 வரையிலான காலப்பகுதி
முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்கானது. இதுவரையிலும் பன்னிரண்டு ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேறியுள்ளன. இவை தவிர
1966-1969 வரை மூன்று ஓராண்டு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட
முதலீடு, பொதுத்துறை ,தனியார்துறை ஆகிய இரு துறைகளுக்குமான முதலீடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. முதலாவது
ஐந்தாண்டு திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட மொத்த முதலீடு ரூ. 3870 கோடிகளாகும். பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் இது 36.44 லட்சம் கோடிகளைத் தாண்டியது.
அறுபது வருடங்களுக்குக் குறைவான காலப் பகுதியில் இந்தியப் பொருளாதாரம் எந்த அளவிற்கு
வளர்ந்துள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவது மற்றும் ஆறாவது ஐந்தாண்டு
திட்டங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தத் திட்ட முதலீடுகளில் பொதுத்துறையின் பங்கு 60 முதல் 70 விழுக்காடு வரை இருந்தது. அதன் பின்னர்
பொதுத்துறையின் பங்கு படிப்படியாகக் குறைந்து மொத்தத் திட்ட முதலீட்டில் தனியார் துறை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

முதலாவது ஐந்தாண்டு திட்டம்
(1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது. மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள்
வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும்
ஒதுக்கப்பட்டது. இதற்குப் பின்னர் தொழில் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு 20 விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே இருந்தது. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில் இது 20 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது.பொதுவாக மகலனோபிஸ் திட்டம் என அறியப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61)
பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு கனரகத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம்
வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக இருந்த தொழில் துறையின் பங்கு இரண்டாவது
திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால் இப்பங்கு ஆறாவது திட்டகாலம்
முதல் குறைந்துகொண்டு வருகிறது. ஒருவேளை பொதுத்துறையில் செய்யப்படவேண்டிய முக்கிய முதலீடுகள் நிறைவு பெற்றிருக்கலாம். எரிபொருள் மின்சக்திக்கான முதலீட்டு ஒதுக்கீடு முதல் நான்கு திட்டங்களில்
மிகக் குறைவாக இருந்தது. இதனால் நாட்டில் பெருமளவு மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு
மிதமான 4 விழுக்காடு வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தன. இதைப் பொருளாதார நிபுணர்கள்“இந்து வளர்ச்சி விகிதம்” என அழைத்தனர். இந்த வளர்ச்சி விகிதங்கள் அடையப்பட்டதால் அவை வெற்றிபெற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன. பின் வந்த திட்டங்களில் பல்வேறு காரணங்களால்
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய இயலவில்லை. நான்காவது திட்டத்திலிருந்து (1969-74) வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால் திட்டமிடும் செயல்பாட்டில், சமூக நோக்கங்களும் இணைக்கப்பட்டன. ஆறாவது திட்டகாலத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட
வளர்ச்சி இலக்குகள் அடையப்பட்டன.
எட்டாவது திட்ட காலத்தில் (1992-97)
பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது.
அப்போதிருந்து வளர்ச்சி விகிதமானது
7 விழுக்காடுகளுக்கு அதிகமாகவேயுள்ளது.(ஒன்பதாவது திட்ட காலத்தில் ஏற்பட்ட சுணக்கம்
நீங்கலாக) அனைவரையும் உள்ளடக்கிய, நியாயத்துடன் கூடிய, நீண்டகால வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நேர்மறை மற்றும் எதிர்மறையான மதிப்பீடுகளும் உள்ளன.

சாதனைகள்

1. பொருளாதாரத்தை விரிவுபடுத்துதல்
2. தேசிய வருமானத்திலும் தனிநபர்
வருமானத்திலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி
3. தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிப்பு

4. வேளாண்மையில் நவீன இடுபொருட்களைப்
பயன்படுத்துவது அதிகரித்ததுடன் வேளாண் உற்பத்தியும் அதிகரித்தது
5. அதிகஅளவில் பன்முகப்படுத்தப்பட்டப்
பொருளாதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *