UG degree வரலாறு

தமிழ்த்தாய் வாழ்த்து _ செய்யுள் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம்இறுதியில் பாடப்படும்.

தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும்.

மனோன்மணியம் பெ.சுந்தரனார் வாழ்க்கை வரலாறு


இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876-ம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1877-ல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880-ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.
திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.
ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணியம் இவரால் 1891-ம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர். இத்தொடர்பே மனோன்ணியத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894-ம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
மனோன்மணியத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970-ல் அறிவிக்கப்பட்டது.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42-வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.

பாடல்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

விளக்கம்:

பூமி என்ற பெண் நீராலான கடலை ஆடையாக அணிந்துள்ளாள்.

அவளின் சிறப்புமிக்க அழகிய முகமாக பாரத கண்டம் (இந்தியா) திகழ்கிறது.

அம்முகத்திற்கு பிறைநிலவு போன்ற நெற்றியாக தக்காணம் அமைந்துள்ளது.

அந்த நெற்றியில் நறுமணமிக்க பொட்டு வைத்தது போல் தமிழகம் உள்ளது.

பொட்டின் மணம் எல்லோரையும் இன்புறச்செய்வது போல் தமிழ்த்தாயும் எல்லாதிசைகளிலும் புகழ்பெற்றவளாக இருக்கிறாள்.

உலகின் மூத்த மொழியாக இருந்தும் இன்றளவும் இளயையாக இருக்கிறாள். தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிற குறையவில்லை. அப்படிப்பட்ட தமிழே, தமிழாகிய பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன். நீ வாழ்க.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *