கல்வி
கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையும் சுகாதாரக் குறிப்பான்களுமே (Indicators) ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன. இந்தியாவில் 1951இல் 18.3
விழுக்காட்டிலிருந்த எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆண்களில்
82 விழுக்காட்டினரும் பெண்களில் 65
விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.ஒப்பிட்டுப் பார்க்கையில் எழுத்தறிவில் பெண்கள்
பின்தங்கியிருந்தனர். தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிகளின்
எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.மேற்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும்
பெருகிற்று. 2014-15இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க, உயர்தொடக்கப் பள்ளிகளும் 2.45 லட்சம் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், 38,498 கல்லூரிகளும், 43 மத்தியப் பல்கலைக்கழகங்களும், 316 மாநிலப்
பல்கலைக்கழகங்களும் 122 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் 181 மாநில தனியார் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன.
நகர மற்றும் கிராமப்புறங்களில் இடைநிற்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச்
சேர்ந்தோராகவே இருந்தனர். குறிப்பாகப் பெண் குழந்தைகளே இடைநிற்றலில் அதிகமாக இருந்தனர்.
சேர்க்கை விகிதத்திலும், இடைநிற்றல் விகிதத்திலும் மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும், பகுதிகளிலும் பள்ளிக் கல்வியின் நிலை மோசமாகவே இருந்தது. இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க
அரசாங்கத்தினால், அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷா அபியான்-SSA), அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்டம் (ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்-RMSA) மற்றும் அண்மையில்
ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்ஷா அபியான்)
போன்றவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பம்
இந்தியா, அறிவியல் ஆய்வு மற்றும்
தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பதில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது. விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909இல் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதியுதவியில்
பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Instititute of Science – IISc)
மட்டுமேயாகும். இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு 1945இல் முனைவர் ஹோமி J. பாபா
என்பாரின் முன்னெடுப்பில், டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research
– TIFR) நிறுவப்பெற்றது. கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக
இது அமைக்கப்பட்டது. புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical
Laboratory), புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய
இயற்பியல் ஆய்வகம் (National Physics Laboratory) ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில்
முதன்முதலாக அமைக்கப்பட்டவை ஆகும். அது முதலாக அறிவியல் துறையின் வானியற்பியல்
(astrophysics), மண்ணியல் (geology) / நிலவியல் சார் இயற்பியல் (geo-physics), உயிரணு மற்றும்
மூலக்கூறு உயிரியல் (cellular and molecular biology), கணித அறிவியல்கள் (mathametical
sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை
தொடர்ந்து பெருகின.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research – CSIR) எனும் ஒரு குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வமைப்பு (CSIR) பயன்பாட்டு அறிவியல் (Applied sciences) களங்களான இயந்திரங்கள், மருந்துகள், விமானங்கள் ஆகியவை குறித்த மேம்பட்ட ஆய்வினை முன்னெடுக்கிறது. அணுசக்தி ஆணையமானது அணு
அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையாகத் (nodal agency) திகழ்கிறது. அணுசக்தி உற்பத்தி
அணு ஆயுத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும். அது போர்த்திறம் சார்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும். அறிவியல் சார்ந்த ஆய்வுகளுக்காக பல நிறுவனங்களுக்கு அணுசக்தி
ஆணையம் நிதியளிக்கிறது.
ஆய்வும் வளர்ச்சியும் குறிப்பிட்டுச்
சொல்லும்படி விரிவடைந்திருக்கும் மற்றொரு துறை வேளாண்மை ஆகும். இத்துறையில் நடைபெறும் ஆய்வுகளை இந்திய வேளாண்
ஆய்வுக் கழகம் (Indian Council of Agricultural Research – ICAR) ஒருங்கிணைக்கிறது. இதன்
ஆய்வுகள், அடிப்படை வேளாண்மை குறித்து மட்டுமல்லாமல், துணை நடவடிக்கைகளாக மீன்வளர்ப்பு, வனங்கள், பால்வளம், தாவர
மரபியல், உயிரி-தொழில்நுட்பம், பல்வேறு பயிர் வகைகளான நெல், உருளைக்கிழங்கு, கிழங்கு வகைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளைக்
கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது. வேளாண்
பல்கலைக்கழகங்களும் கல்வி கற்பித்தல், வேளாண் நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில்
செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் 67 வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
IIT, சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian Institute of Technology – IITs) பொறியியலின்
வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும். முதல் IIT கரக்பூரில் நிறுவப்பெற்றது. தொடர்ந்து டெல்லி, பம்பாய், கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன. தற்சமயம் நமது நாட்டில் 23 IITகள் செயல்படுகின்றது. இவையல்லாமல் 31 தேசியத்
தொழில் நுட்ப நிறுவனங்களும் (National Institute of Technology – NIT), 23 இந்திய தகவல் தொழில்
நுட்ப நிறுவனங்களும் (Indian Institutes of Information
Technology – IIIT) செயல்பட்டு வருகின்றன. இத்தகைய முன்னேற்றங்கள்
ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவில் அறிவியல் ஆய்வானது வளர்ந்த நாடுகள் மற்றும் சீனா
அடைந்துள்ள முன்னேற்றங்களை எட்டிப்பிடிக்க இன்னும் நீண்டதூரம் பயணம் செய்தாக வேண்டுமென்பது பொதுவான கருத்தாகும். நாட்டில்
அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் பல இருந்தும் கோட்பாட்டுக் கருத்துக் களத்தில் ஆய்வுப் பங்களிப்பு
ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அரிதாகவும் உள்ளது.