திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 13 அடக்கம் உடைமை

தெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் அடக்கத்தை அதன் செறிவு அறிந்து காக்க வேண்டும் அவர் மலையைவிட பெரியவராகக் கருதப்படுவார். வாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம். காரணம், தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை அது உண்டாக்கிவிடும். முழுமையாகக் கற்று அறிந்தவர், பணிதலுடன் வாழ்வார்.

1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

8. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

10. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

பொருள் விளக்கம்

1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

தெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் பணிவற்ற தன்மை, மீளமுடியாத இருட்டில் சேர்த்துவிடும்.

2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

பொருளாக இல்லாத அடக்கத்தைப் பாதுகாக்க வேண்டும். அதன் பயனைவிடச் சிறந்தது வேறில்லை உயிருக்கு.

3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

திறன் அறியப்பட்டு நன்மைகள் விளையும், அறிய வேண்டியதை அறிந்து செயல்பட்டு அடக்கமாக இருந்தால்…

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

இருப்புத்தன்மையை மாற்றிக்கொள்ளாமல் அடக்கம் அடைந்தவரின் வெளிப்பாடுகள், மலையைவிடப் பெரியது.

5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

எல்லாருக்கும் நல்லது பணிதல், அப்படியானவர்களின் மனம் செல்வந்தருக்கும் செல்வம் தரவல்லது.

6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒன்றில் மட்டும் ஆமை போல் ஐந்து புலன்களையும் அடக்கச் செய்தால், எழுந்து செயல்படும்போதெல்லாம் காவலாக இருக்கும்.

7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும். இல்லையென்றால் சோகத்தைக் காக்க நேரிடும், சொல் குற்றம் ஏற்பட்டு…

8. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

ஒரே ஒரு தீமையான சொல், அதன் அர்த்தம் விளங்கும்போது நன்மைகள் தாராது போகும்.

9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

தீ பட்ட காயம் ஆறிப்போகும். நாவில் திட்டிய காயம் வடுவாக மாறும்.

10. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

முடிவை முன்னிறுத்தி கற்று அடங்கி நடப்பவன் இடத்தில், அறமும் வழி பார்த்து நுழையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *