திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 14 ஓழுக்கமுடைமை

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம். அது வீடுபேறு அடைய உதவும் என்பதால், உயிரைவி மேலானதாகப் போற்ற வேண்டும். ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லொழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும், உலகத்துடன் ஒத்திசையும்படி நடப்பவரே கற்றறிந்தவர்.

1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.

3.ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

பொருள் விளக்கம்

1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

சுயமுன்னேற்றத்துக்கான வரைமுறையால் சுயத்தை அறியலாம். சுயமுன்னேற்றத்துக்கான வரைமுறை, உயிரைவிட சிறந்ததாகக் காக்க வேண்டும்.

2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.

ஒழுக்கத்தை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். சுயமுன்னேற்றத்துக்கான வரைமுறையைப் புரிந்துகொண்டு நடப்பவருக்கும் அதுவே துணையாக இருக்கிறது.

3.ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். ஒழுக்கமின்மை (இழுக்கம்) பிறப்பையே அசிங்கப்படுத்திவிடும்.

4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

பார்ப்பானுக்கு நினைவிழந்து போனாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பிறப்பொழுக்கம் அற்றுப்போனால் ஏற்றுக்கொள்ள முடியாது.

5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

அழுக்கு மனம் உள்ளவனின் வளர்ச்சியில்லா தன்மைபோல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு வளர்ச்சியில்லை.

6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

ஒழுக்கத்தில் தவறாதவர்கள் உயர்ந்தவர்கள். அவர்கள் இழுக்கத்தின் அவல நிலை அறிந்துள்ளார்கள்.

7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

ஒழுக்கத்தால் உன்னதமான நிலையை அடைவார்கள். இழுக்கத்தால் இதுவரை இல்லாத பழி வரும்.

8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

நன்றியுணர்வுக்கு வித்தாக நல்லொழுக்கம் அமையும், தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்.

9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கமானவர்கள் தீமையானவற்றை தவறியும் வாயால்கூட சொல்வதில்லை.

10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உலக மனிதர்களுடன் ஒத்திசைவு கொள்ள கற்காதவர், பல துறை அறிவுபெற்றும் அறிவில்லாதவரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *