திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 20- பயனில சொல்லாமை

பயனில சொல்லாமை அதிகார விளக்கம்

பயன் தராத எதையும் பெரியவர்கள் எப்போதும் சொல்வதில்லை. பலரை வெறுப்படையும்படி பயனில்லாத சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார். எந்த ஒரு விஷயத்தையும் ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதைச் சொல்வதில்லை.பயன் தராத எந்த ஒரு சொல்லும் செயலும் யாருக்கும் நல்லதாக அமையாது.

1.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.

3.நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.

4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.

5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.

6. பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல்.

7. நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

10. சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.

1.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பலர் முன்னிலையில் பயனில்லாதவற்றைச் சொல்வதால் அனைவராலும் இகழப்படுவார்.


2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.

பலர் முன்னிலையில் பயனில்லாதவற்றைச் சொல்வது, நண்பர்களுக்கு நன்மையில்லாததைச் செய்வதைவிட தீமையானது.

3. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.

ஒருவன் பயனில்லாதவற்றைச் சொல்லும்போதே, அவனால் நன்மை ஏதும் விளையாது என்று புரிந்துவிடும்.

4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.

பயன் இல்லாத பண்பில்லாத சொற்களைப் பேசுபவன் பலருடைய அன்பையும் இழப்பான், நன்மைகளையும் இழப்பான்.

5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.

நற்பண்புகள் உள்ளவர்கள் பயனற்ற சொற்கள் சொன்னால், அவர்களிடம் இருக்கும் நற்பண்புகள் விலகிவிடும்.

6. பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல்.

எவருக்கும் பயன் இல்லாத சொற்களைப் பேசுபவனை குழந்தை என்று சொல்லாதே, பதர் போன்று யாருக்கும் பயன்படாதவன் என்று சொல்.

7. நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

சொல்வதை இனிமையாகச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், பயன் இல்லாதவற்றைச் சொல்லாமல் இருப்பதே சான்றோர்க்கு அழகு. 

8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

அரிதான பயனை ஆராயும் அறிவுள்ளவர்கள், பெரிய பயனை விளைவிக்காத சொல்லும் ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

ஐயம் தெளிந்த அறிவாளர்கள், மறந்தும்கூட பொருள் இல்லாத சொல்களைப் பேச மாட்டார்கள்.

10. சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.

சொல்வதென்றால் பயனுள்ள சொற்களைச் சொல்ல வேண்டும்; பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக் கூடாது

Related posts

திருக்குறள் அதிகாரம் – 4 அறன் வலியுறுத்தல்

Admin

திருக்குறள் அதிகாரம் – 7 மக்கட்பேறு

Admin

திருக்குறள் அதிகாரம் – 16 பொறையுடைமை

Admin

Leave a Reply

%d bloggers like this: