திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 6 வாழ்க்கைத் துணை நலம்

வாழ்தலே எல்லாவற்றிலும் சிறந்தது. அதற்குத் துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம் பல கிடைத்துவிடும். ஆனால், நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டியபொழுது வரும் மழையைப் போன்றவள் மனைவி. மேலும், தன்னையும் காத்து, தன்னைச் சார்ந்தவரையும் காப்பவளும் அவளே. எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்களம்.


1) மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
3) இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
4) பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்?.
5) தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.
6) தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்விலாள் பெண்.
7) சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
8) பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
9) புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
10) மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.

பொருள் விளக்கம்

1) மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

வீட்டுக்குத் தேவையானதை சிறப்புற செய்பவளை தனதாகக் கொண்டவன், வளம் பல காணும் வாழ்க்கைத் துணையை அடைந்தவன்.

2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.

வீட்டை சிறப்பாக ஆளும் தகுதி இல்லாதவள் இல்லத்தரசியனால் (மனைவி) வாழ்வில் எவ்வளவு சிறப்புகள் இருந்தும் பயன் இல்லை. 

3) இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

இல்லை என்பதே இல்லத்தாளின் குணமாக இருந்தால், அந்த இல்லத்தாளைவிட துன்பம் தரக்கூடிய ஒன்று ஏதும் இல்லை.

4) பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

கற்புநெறி உள்ள பெண்ணைவிட பெற வேண்டிய ஒன்றும் எதுவும் இல்லை.

5) தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.

சிறப்பு பெற்றவர்களை தொழ மறுத்து தனது கணவனை மட்டுமே தொழுபவள், எதிர்பார்க்கும்பொழுது பெய்யும் மழை போன்றவள்.

6) தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்விலாள் பெண்.

தன்னைக் காத்து, தன் சார்ந்தவர்களையும் பாதுகாத்து, தகுதிக்கு உதாரணமாக வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.

7) சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பெண்களைத் தன்னைக் காத்துக்கொள்ளும் தன்மையே, காவலில் வைத்துக் காப்பதையும்விட முதன்மையானது.

8) பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

அடைந்தவர் அடைந்தது அடைய வேண்டிய பெண்ணை அறிய சிறப்பும் புதிய ஒளியும் இருக்கும் உலகில்.

9) புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழ் அடைந்த குடும்ப வாழ்க்கை வாழாதவருக்கு, இகழ்ந்து பேசுவார் முன் காளை போன்ற கம்பீர நடை இல்லை.

10) மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.

முழுமை என்பது குடும்ப வாழ்க்கை; அதன் சிறப்பே நல்ல குழந்தைகளைப் பெறுவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *