திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 8 அன்புடைமை

ஒருவர் அன்பானவராக இருந்தால், அவரால் இரக்கத்தை மறைக்க முடியாது. கண்களில் கண்ணிர் வழியும். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் உயிரையும் அடுத்தவற்குத் தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள்.

1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
3) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
4) அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
5) அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
6) அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
7) என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
8) அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
9) புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
10) அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள் விளக்கம்

1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்.

அன்பைத் தாழ்ப்பாள் போட்டுத் தடுக்க முடியுமா? அன்பு மிகுதி அடைந்தால், கண்ணில் ஈரம் பெருகி வெளிப்படும்.

2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர், எல்லாவற்றையும் தனக்கு உரியது என்பர்; அன்பு உள்ளவர்களோ, எனது உயிரும் பிறருக்கே என்பர்.

3) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

அன்புடன் இணைந்த செயல் என்பது, சிறந்த உயிர்களின் உடம்புடன் உயிர் கொள்ளும் தொடர்பு போன்றது.

4) அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

அன்பு தருகின்ற ஆர்வம் உண்டானால், அது தரும் நல்ல பண்புகள் நாட முடியாத அளவு சிறப்புகளாக இருக்கும்.

5) அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

அன்பினால் அமையும் செயலின் பயனே, இந்த உலகில் இன்பம் பெற்றவர்களின் சிறப்பு.

6) அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

தர்ம செயல்களுக்கு மட்டுமே அன்பு காரணம் என்பார்கள் அறியாதவர்கள்; வீரத்துக்கும் அன்பே துணையாகும்.

7) என்பு இலதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

எலும்பு இல்லாதவற்றை வெயில் தாக்குவதைப்போல, அன்பு இல்லாதவர்களை அறம் தாக்கும்.

8) அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று.

அகத்தில் அன்பில்லா உயிர் வாழ்க்கை என்பது, கடினமான பாறையிலும் வெப்பத்திலும் மரம் துளிர்வதைப் போன்றது.

9) புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

வெளியே இருக்கும் உறுப்புகள் தீங்கு செய்யும், உடம்பின் உள் உறுப்பான அன்பு இல்லாதவருக்கு.

10) அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் பாதையே உயிரின் தன்மை. அன்பு இல்லாதவர்களுக்கு எலும்பு மேல் போர்த்திய தோல் போன்றதே உடம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *