பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை
அறநூல்கள். அறநூல்களில் ‘உலகப் பொது மறை‘ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவோம்; வாழ்வில் பின்பற்றுவோம்.
கடவுள் வாழ்த்து
1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2) கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
3) மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4) வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6) பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7) தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8) அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.
9) கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
10) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள்
. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல, ஆதியில் பகுக்க முடியாத வானத்தை (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம்.
*
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்?
*
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.
*
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
தேவை, தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்குத் துன்பம் என்றும் இல்லை.
*
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இருளாகும் இரு வினைகளை சாராது, இறைவனை புரிந்துகொண்டவர் புகழப்படுவது உறுதி.
*
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.
*
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
நிகரற்றவனின் நிழலை அடைந்தால் அன்றி, மனக்கவலைகள் மாறுவது இயலாது.
*
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
முடிவை புரிந்துகொண்ட இயல்பானவனின் நிழலை அடையாவிட்டால், பிறவி அறுப்பது கடினம்.
*
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை; எண் குணம் கொண்டவனை வணங்குவதே தலை.
*
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவன் அடி சார்ந்தால் பிறவிக் கடலில் நீந்தலாம்; இல்லையேல், நீந்த முடியாது.