வரலாறு

வரலாற்றில் உலக வர்த்தக புரட்சி

மறுமலர்ச்சி மற்றும் சீர்த்திருத்த நடவடிக்கைகளுடன் அடிப்படைப் பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்தன. இந்த தொடர் பொருளாதார
மாற்றங்களின் விளைவாக இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்த ஓரளவு நிலையான, உள்ளூர் நிலையிலான, இலாப நோக்கற்ற பொருளாதாரம், பதினான்காம் நூற்றாண்டு மற்றும் அதனை அடுத்து வந்த நூற்றாண்டுகளில் உலகளாவிய வலுவான முதலாளித்துவ நிலைக்கு மாற்றம் பெற்றது. வர்த்தகப் புரட்சி என்று அழைக்கப்பட்ட இது திடீரென நிகழ்ந்துவிடவில்லை படிப்படியாகவே நிகழ்ந்தது.

புரட்சியின் தொடக்கத்துக்கான காரணங்கள்

(அ) மத்தியதரைக்கடல் வர்த்தகம் இத்தாலிய நகரங்களால் கைப்பற்றப்பட்டது.
(ஆ) இத்தாலிய நகரங்கள் மற்றும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள வர்த்தக அமைப்பான ஹன்சீடிக் லீக் எனும் அமைப்பை (ஒரு வணிக சங்கம்) சேர்ந்த வர்த்தகர்கள் இடையே வர்த்தகம் செழிப்படைந்து மேம்பட்டது.
(இ) வெனிஸின் டூகா நாணயமும் பிளாரன்ஸின் ப்ளோரின் நாணயமும் அறிமுகம் செய்யப்பட்டது.
(ஈ) வர்த்தகம், கப்பல் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் சுரங்கத் தொழில்மூலமாக ஈட்டப்பட்ட பெரும் தொகை சேர்ந்தது.
(உ) போர் சாதனங்களுக்கான தேவையும் அதிகம் வரி வசூலிக்கக்கூடிய சொத்தை உருவாக்கும் வகையில் வணிகத்தை மேம்படுத்த புதிய
அரசர்கள் கொடுத்த ஊக்கம்.ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இந்தக் காரணிகளுடன் இத்தாலியக் கட்டுப்பாடு இன்றி கிழக்குப்பகுதிக்கு புதிய வழித்தடத்தை கண்டுபிடிக்க
ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய வணிகர்கள் அளித்த ஊக்கம் வர்த்தகப் புரட்சிக்கு வித்திட்டன.

வர்த்தகப் புரட்சியின் முக்கிய விளைவுகள்

வங்கித்துறை வளர்ச்சி என்பது வர்த்தகப் புரட்சிக்கான முக்கிய காரணியாகும். வட்டிக்கு பணம் கொடுப்பது, வங்கித்துறை ஆகியன இடைக்காலத்தில் மரியாதை மிகுந்த தொழில் இல்லை என்று சமயத்தால் குறிக்கப்பட்டிருந்தன. ஆனால் 14ஆம் நூற்றாண்டில் லாபத்துக்காக
பணத்தை கடனாக வழங்கும் தொழில் ஒரு நிறுவப்பட்ட வர்த்தக நடைமுறையாக மாறியது. வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களை இத்தாலிய நகரங்களின் மிகப்பெரிய வர்த்தக மையங்கள்தான் உண்மையில் நிறுவின. பதினைந்தாம் நூற்றாண்டில் வங்கித் தொழில் தெற்கு ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கு பரவியது. தனியார் நிதி நிறுவனங்களின் எழுச்சியை அடுத்து
அரசு வங்கிகள் நிறுவப்பட்டன. 1657இல் பேங்க் ஆஃப் ஸ்வீடன் முதலில் நிறுவப்பட்டது. 1694இல் பேங்க் ஆஃப் இங்கிலாந்து நிறுவப்பட்டது.
சுரங்கத்தொழில், உருக்குதல் தொழில் ஆகிய புதிய தொழில்கள் வளர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியால் மேலும் ஊக்கம் பெற்றன.
வணிக அமைப்புகளிலும் மாற்றம் வந்தது. நெறிப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் உருவாகின. ஒரு பொதுக்காரணத்துக்காக வணிகர்கள் ஒன்றிணைந்து இத்தகைய நெறிப்படுத்தப்பட்ட கம்பெனியை உருவாக்கினார்கள். நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி இடையே வர்த்தகத்திற்காக
நிறுவப்பட்ட மெர்ச்சன்ட் அட்வென்சரர்ஸ் என்ற ஆங்கிலேய கம்பெனி ஒரு நல்ல உதாரணமாகும்.
இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினைக் குழுக்களால் உருவாக்கப்பட்ட உற்பத்திமுறை செயலிழந்தது. பதினேழாம் நூற்றாண்டில்
நெறிப்படுத்தப்பட்ட கம்பெனி என்பது கூட்டுப் பங்கு நிறுவனங்களாக புதிய வகையில் உருமாற்றம் பெற்றது. வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் கூட்டுப்பங்கு நிறுவனம் எனும் கருத்து டச்சு நாட்டின் கண்டுபிடிப்பு ஆகும். இது
அதிக எண்ணிக்கையிலான மக்களிடையே அபாயங்களை (மற்றும் இலாபங்களை) பரப்புவதன் மூலம் பெரிய அளவிலான முதலீட்டை
சாத்தியமாக்கியது. பிந்தைய கட்டங்களில், வர்த்தக புரட்சியின்
ஒரு பகுதியாக வணிகவியற் கொள்கை (வணிகவாதம் – mercantilism) என்றழைக்கப்பட்ட புதிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்
ஏற்கப்பட்டன. தேசிய வளமையை மேம்படுத்துவது மற்றும் அரசின் அதிகாரத்தை அதிகரிப்பது ஆகியவற்றில் அரசின் தலையீட்டை உடையது
வணிகவாதம் என்ற முறையாகும். தலையீட்டின் நோக்கம் வர்த்தகம் மற்றும் உற்பத்தியின் அளவை விரிவாக்குவது மட்டுமல்லாமல் அரசின் கருவூலத்துக்கு அதிக நிதியைக் கொண்டுவருவதும் ஆகும். நடுத்தரவர்க்கத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது வர்த்தகப் புரட்சியின் இதர முக்கியமான முடிவுகளாகும். வணிகர்கள்,
வங்கியாளர்கள், கப்பல் முதலாளிகள், முதன்மை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை தொழில் முனைவோர் போன்ற பலரும் இந்த நடுத்தர வகுப்பு
நிலையில் உள்ளடங்கினார்கள். அதிகரிக்கும் வளமையின் விளைவாகவும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக அரசரை ஆதரிப்பதன் விளைவாகவும்
அவர்கள் அதிக அதிகாரம் பெற்றனர். வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அமைந்தது அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றதே ஆகும்.ஐரோப்பிய சமூகத்தில் இருந்து அடிமைத்தனம் முதல் ஆயிரமாவது (மில்லினியம்) ஆண்டின் இறுதியில் முற்றிலுமாக
காணாமல் போயிருந்தது. ஆனால் ஸ்பானிய, போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலேய காலனிகளில் சுரங்கம் மற்றும் தோட்டவிவசாயம் வளர்ச்சி
கண்டதையடுத்து அடிமைகளை திறமையற்ற தொழிலாளர்களாக ஆளெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. பூர்வீக அமெரிக்கர்களை வேலை
வாங்குவது கடினமானதாக இருந்ததால் அவர்களை
அடிமைகளாக்கும் முயற்சி தோல்வி கண்டது. ஆப்பிரிக்கர்களை இறக்குமதி செய்ததன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. டிரான்ஸ்
அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் மூலமாக 1 கோடியே
10 லட்சத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மோசமான கதை நவீன உலகை உருவாக்குவதில் ஒரு
அவமானச் செயலாக பதிவுபெற்றுள்ளது. இறுதியாக, வர்த்தகப் புரட்சி தொழிற்புரட்சிக்கு வழியமைத்தது. முதலாளித்துவ வகுப்பை
உருவாக்கியதன் விளைவாகவும் வர்த்தகர்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை பின்பற்றியதன் விளைவாகவும் உற்பத்திப் பொருட்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைத்தது. தொழிற்சாலை மூலமான உற்பத்திக்கு ஒரு சிறந்த உதாரணமாக பருத்தித் துணி உற்பத்தி விளங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *