திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 7 மக்கட்பேறு

ஒருவர் தனது வாழ்நாளில் பெற வேண்டியது அறிவில் சிறந்த குழந்தைகளே. அது பிறவித் துன்பத்தை துடைக்கவல்லது. நமது பிள்ளை என்றாலும், அதனதன் வினைப்பயன் அதனதனை தொடரும். குழந்தைகள் உண்ட மிச்சம் போன்ற அமிழ்து வேறு இல்லை. அவர்களின் குரல் போன்ற இனிமை எந்த இசையிலும் இல்லை. தன் குழந்தைகளுக்கு நல்வாய்ப்பை எற்படுத்த வேண்டியது தந்தையின் கடமை. தாயும் தன் மகனை சான்றோன் என்பதில் மகிழ்சியடைவாள். குழந்தைகளும் தன் பெற்றோர்க்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும்.

1) பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
2) எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
3) தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
4) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
5) மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
6) குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
7) தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
8) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
9) ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
10) மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

பொருள் விளக்கம்

1) பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

அறிவுடைய குழந்தைகள் தவிர நான் அடைய வேண்டியது வேறு இல்லை.

2) எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்.

பழி உருவாக்காத பண்புடைய குழந்தைகளைப் பெற்றால் எழுகின்ற பிறப்புக்கு எல்லாம் தீயவை தீண்டாது.

3) தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

தான் பெற்றது என்பதே மக்கள்; அவர்கள் பெற்றது அவரவர் வினையால் வரும்.

4) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

தன் குழந்தை சின்ன கைகளால் கரைத்த கூழ், அமிழ்தைவிடவும் சிறந்த சுவையுடையதாக இருக்கும்.

5) மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

குழந்தைகள் தன்னை தீண்டுவது உடலுக்கு இன்பம். மேலும் அவர்கள் சொல் கேட்பது காதுக்கு இன்பம்.

6) குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

மழலைகளின் சொற்களைக் கேட்காதவர்கள்தான் இசைக்கருவிகளில் இருந்து வரும் இசை இன்பமானது என்று சொல்வார்கள்.

7) தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

தகப்பன் தன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய நன்றி, ஞானக் கூட்டங்களில் முன்னோடியாக இருக்கச் செய்வது.

8) தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

தன்னைவிட தனது குழந்தைகள் அறிவுபெறுவது, உலகின் அனைத்து உயிருக்கும் இனிமையானதாகும்.

9) ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

பிறக்கும்போது பெருமை கொண்ட அன்னை, தன் மகனை அறிவாளி என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பாள்.

10) மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.

இவனைப் பெற பெற்றோர் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர் கேட்கும்படி செய்வதே பெற்றோர்க்கு மகன் செய்யும் உதவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *