திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 19 புறங்கூறாமை

புறங்கூறாமை அதிகார விளக்கம்

அறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை, ஆனால், பின்னால் புறம் பேசக் கூடாது. தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்க விரும்புவர் பிறரைப் பற்றி புறம் கூற மாட்டார். யாரோ ஒருவரிடம் உள்ள குற்றத்தைப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கும் என்பதை நினைத்தால், வாழ்க்கையில் துன்பம் என்பது இராது.

1. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது
2. அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை.
3. புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
4.கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க 
முன்இன்று பின்நோக்காச் சொல்.
5. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். 
6.பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
7.பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
8.துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
9.அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை
10.ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

1. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.

நீதியைப் பேசாமல் தேவையற்றதைச் செய்யும் ஒருவர் அடுத்தவரைப் பற்றி அவதூறு பேசாமல் (புறம்கூறாமை) இருப்பது இனிது.

2. அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை.

அறம் இல்லாததையும் தேவையற்றதையும் செய்வதைவிட தீங்கானது, புறம் பேசி பொய்யாக நகைப்பது.

3. புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.

புறம் பேசி பொய்யாக உயிர் வாழ்வதைவிட, மரணிப்பதே அறம் கூறும் நன்மையைத் தரும்.

4. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க 
முன்இன்று பின்நோக்காச் சொல்.

நேருக்கு நேர் நின்று ஒருவரின் கண்களைப் பார்த்து கடுஞ்சொல் சொல்வதுகூடத் தவறில்லை. ஆனால், ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி புறம் கூறக் கூடாது.

5. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். 

ஒருவர் புறம் பேசும் தன்மையை வைத்து அவருடைய மனத்தில் அறம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

6. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

பிறர் மீது பழிபோட்டுப் பேசுபவர், மற்றவர்களும் தன் மீது பழி சுமத்தும் நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
  

7. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

நிறை சொல்லி நட்பை வளர்க்க இயலாதவர்கள்தான் குறைகளைச் சொல்லி உறவைப் பிரிப்பார்கள்.

8. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

தனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி புறம் கூறும் பழக்கம் உடையவர்கள், தனக்கு நெருக்கம் இல்லாதவர்களைப் பற்றி என்னவெல்லாம் சொல்லமாட்டார்கள்.

9. அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை.

நீதியின் பொருட்டு இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகம், தனது பொறுமைக்குணத்தால் புறம் சொல்பவர்களையும் சேர்த்து ஏற்றுக்கொண்டிருக்கிறது.

10. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறரிடம் உள்ள குற்றங்களைத் தேடிப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அவருக்குக் கெடுதல் வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *