திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

நடுநிலை தவறிய வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுக்கு அது தடை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும், அடுத்தவரின் பொருள் மீது ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட்டொழித்துவிட்டேன் என்ற செருக்கு இன்பம் தரும்.

1. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

நடுநிலை தவறி, நல்ல பொருள் என்று ஒரு பொருள் மீது வேட்கை கொண்டால், குடும்ப ஒழுக்கம் கெட்டு குற்ற உணர்வும் தந்துவிடும்.

 
2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவுஅன்மை நாணு பவர்.

நடுவுநிலைக்கு அஞ்சும் நபர்கள், பலன் கிடைக்கும் என்றாலும் பழிக்கப்படும் நிலை வரும் என்பதால், பிறர் பொருள் மீது வேட்கை கொள்ளமாட்டார்கள்.

 
3. சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

சிறிய இன்பத்துக்காக, வேட்கை கொண்டு நீதி அல்லாததை மாறாத இன்பம் நாடுபவர்கள் செய்யமாட்டார்கள்.

 
4. இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

மனிதர்களில் புலன்கள் வென்றவர்கள், தமக்கு இல்லையே என்ற நிலையிலும் பிறர் பொருள் மீது என்றுமே வேட்கை கொள்ளமாட்டார்கள்.

5. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

பிறர் பொருள் மீது ஆசைகொண்டு வெறியுடன் நடந்துகொள்பவர், அவர் எவ்வளவு கூரிய அறிவு பெற்றிருந்தாலும் அது புரிதல் அற்ற அறிவாகிவிடும்.

6. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

அருள் நாடி வேட்கை கொண்டு ஒழுக்க வழி நிற்பவர், பிறர் பொருள் மீது வேட்கை கொண்டால் அருள் வாழ்வு அழிந்துபோகும்.

 
7. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற்கு அரிதாம் பயன்.

பிறர் பொருள் மீது கொள்ளும் வேட்கையால் கிடைக்கும் பலன், மரணித்தவர் அடைந்த பயனைப் போன்றது.

 
8. அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

பிறர் பயன்படுத்தும் பொருள் மீது வேட்கை கொள்ளாமல் இருப்பதே அழியாத செல்வம்.

 
9. அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந்து ஆங்கே திரு.

நீதியை அறிந்து வேட்கையை விட்ட அறிவுடையவரின் திறமையை அறிந்து உயர்வு தானாக வந்து சேரும்.

10. இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னும் செருக்கு.

கேடுவரும் என்பதால் பிறர் பொருள் மீது வேட்கை கொள்ள வேண்டாம்; பிறர் பொருள் மீது வேட்கை கொள்ளாமல் இருத்தலே மனமகிழ்ச்சியைத் தரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *